Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


தொழிநுட்பச் செய்திகள்


நண்பேன்டா - சினிமா விமர்சனம்!.

நண்பேன்டா - சினிமா விமர்சனம்!.

என் படம் ஒரு கல் ஒரு கண்ணாடியைத்தான் ரீமேக் செய்துள்ளேன்', என்று நண்பேன்டா படம் பற்றி உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூறினார். அது தன்னடக்கமெல்லாம் இல்லை, உண்மைதான் என்பது படம் பார்த்தபோது புரிந்தது! இந்தப் படத்துக்கு கதையெல்லாம் எதுக்கு... காமெடியா சீன் பண்ணலாம். அதை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம் என நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. எந்த வேலைக்கும் போகமல், மாதாமாதம் ஒன்றாம் தேதியானதும் திருச்சிக்குப் போய் தன் நண்பன் சந்தானத்தின் 'சம்பளத்தை' ஆட்டயப் போடுபவர் உதயநிதி. 

அப்படி ஒரு முதல் தேதியன்று, 'ஒரு பெண்ணை ஒரு நாளில் மூன்று முறை வெவ்வேறு இடங்களில் பார்த்தால், அவள் உனக்குத்தான்' என அம்மா சொன்ன ஜோசியத்தை நம்பி திருச்சிக்குக் கிளம்புகிறார் உதயநிதி. நயன்தாராவைப் பார்க்கிறார். காதல் கொள்கிறார். அன்றே வெவ்வேறு இடங்களில் மூன்று முறை நயன்தாராவைப் பார்த்துவிட, திருச்சியிலேயே டேரா போட்டு, நயன் மனசில் குடியேற முயல்கிறார். 

அந்த முயற்சி கிட்டத்தட்ட வெற்றி பெறும் நேரத்தில், நயன்தாரா மகா சீரியஸாகச் சொல்லும் ப்ளாஷ்பேக் ஒன்றைக் கேட்டு பகபகவென சிரித்து வைக்க, கோபத்தில் காதலுக்கே குட்பை சொல்கிறார் நயன்தாரா. அந்த நேரம் பார்த்து, வில்லன் ஸ்கார்ப்பியோ சங்கர் எனும் ராஜேந்திரன், ஒரு லோன் விவகாரத்தில் நயன்தாராவைக் கொல்லப் பார்க்கிறார். ஒரு எதேச்சையான சேஸிங்கில் ராஜேந்திரனே கொல்லப்பட, பழி சந்தானம், உதயநிதி மீது விழுகிறது. கொலைப் பழியிலிருந்து எப்படி தப்புகிறார்கள், 

உதயநிதி - நயன்தாரா எப்படி இணைகிறார்கள் என்பதெல்லாம் சொல்லாமலே உங்களால் யூகிக்க முடியும் க்ளைமாக்ஸ்! படத்தின் 50 சதவீத காட்சிகள், ஓகே ஓகே பாணிதான். அதில் சரவணன் - பார்த்தா என்றால், இதில் சத்யா - சிவக்கொழுந்து.. வேலையில்லாத வெட்டியில்லாத உதயநிதி, நண்பன் சந்தானத்தின் செலவில் ஜாலி பண்ணுவது, காதலியை தொடர்ந்து வெறுப்பேற்றுவது, நண்பனை காதலியுடன் சேர்த்து வைத்துவிட்டு, தன் காதலியுடன் சேர்த்து வைக்குமாறு கேட்பது... என ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டாவிலும் ரிபீட்டாகிறது. 

உதயநிதிக்கு கடந்த இரு படங்களிலும் கண்ணாமூச்சு காட்டிய நடிப்பும் சரி, நடனமும் சரி.. இந்தப் படத்தில் பிடிபட்டுவிட்டது. முகம், உதடுகளை மட்டும் கொஞ்சம் ப்ரெஷ்ஷா வைத்துக் கொண்டால் பார்க்க நன்றாக இருக்கும். கடைசி பாடலில் நயன்தாராவுடன் செம ஆட்டம். ரசிக்க வைக்கும் அளவுக்கு ஆடியிருக்கிறார். சந்தானத்துடன் அவரது காமெடி ரசிக்க வைத்தாலும், அது சரவணன் - பார்த்தா அளவுக்கு இல்லை. சந்தானத்துக்கு கிட்டத்தட்ட ஓகேஓகே காஸ்ட்யூம், 

ஒப்பனை. அவருக்கு ஜோடி ஷெரீன். கொஞ்ச நாளைக்கு இந்த ஜோடி 'ஓடும்' என்றுதான் தெரிகிறது. நயன்தாரா படம் முழுக்க நிறைந்து நிற்கிறார். பார்ப்பவர் மனங்களிலும்தான். ஆனால் அவருக்கான ப்ளாஷ்பேக் என ஒன்றைச் சொல்கிறார்களே.. அதற்கு இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் இயக்குநர். இதைவிட சந்தானத்தின் காதல் ப்ளாஷ்பேக் கொஞ்சம் பரவாயில்லை எப்போதும் நயன்தாராவின் கூடவே வரும் அந்தப் பெண்ணுக்கு நடிக்க பெரிய வாய்ப்பில்லை. ஆனால் ரசிக்கும்படி இருக்கிறார்! 

ஷாயாஜி ஷிண்டே, சித்ரா லட்சுமணன், ராஜேந்திரன், மனோபாலா என பலரும் ஏற்ற வேடத்தை சரியாகச் செய்திருக்கிறார்கள். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜின் இசை இரண்டுமே படத்தைக் காப்பாற்ற உதவுகின்றன. அதே நேரம் முணுக்கென்றால் ஒரு டூயட்டுக்கு நயனும் உதய்யும் வெளிநாடு கிளம்பிப் போய்விடுவது, அலுப்பாக இருக்கிறது. யாருக்கும் அத்தனை சுலபத்தில் கிடைக்காத மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் கிடைத்திருக்கிறது அறிமுக இயக்குநர் ஜெகதீஷுக்கு. அதை வைத்து இன்னும் சுவாரஸ்யமான ஒரு காமெடிப் படத்தைத் தந்திருக்கலாம். அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார் இயக்குநர்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top