Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -கடலுக்கடியில் சுற்றி பார்க்க இந்தியாவில் இடம் இருக்கு தெரியுமா.?

இந்திய கடலுக்கடியில் சுற்றுலா செல்ல விருப்பமா..?

நம் எல்லோருக்கும் தெரியும் நாம் வாழும் இந்த உலகம் 71% நீரும் 29% நிலத்தாலும் ஆனதென்று. அப்படிப்பார்த்தால் உலகம் முழுக்க ஒருமுறை பயணித்து ஆசிய, ஆப்ரிக்க, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்கள் முழுக்க நூறுக்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு சென்றிருந்தாலும் மொத்த உலகத்தின் கால் வாசியை மட்டுமே நாம் சுற்றிப்பார்த்திருப்போம். 

இவற்றை எல்லாம் தாண்டி நிலத்தில் இருப்பதை காட்டிலும் ஆயிரம் மடங்கு விநோதங்களையும் விசித்திரங்களையும் தன்னுள் கொண்டிருக்கும் கடலுக்குள் என்றேனும் சென்று பார்க்க வேண்டும் என ஆவல் எழுந்திருக்கிறதா உங்களுள்?. வாருங்கள் சுவாசக்கவசத்தை மாட்டிக்கொண்டு இந்தியாவில் இருக்கும் சிறந்த ஸ்குபா டைவிங் இடங்களுக்கு சென்று கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்கலாம்...... 

லட்சத்தீவுகள்-பூலோக சொர்க்கம்!!:சந்தேகமே இல்லாமல் இந்தியாவில் ஸ்குபா டைவிங் செய்ய சிறந்த இடம் என்றால் அது அரேபிய கடலில் அமைந்திருக்கும் லட்சத்தீவுகள் தான். தெள்ளத்தெளிவான நீல நிறக்கடலில் மூழ்கி பவளப்பாறைகளை தொடும் தூரத்தில் பார்க்கும் அற்புதமான வாய்ப்பு இங்கே நமக்கு கிடைக்கும். இந்த லட்சத்தீவில் ஸ்குபா டைவிங் செய்ய சிறந்த இடமாக கவரட்டி கருதப்படுகிறது. இங்கிருக்கும் ஆரவாரம் இல்லாத கடல், கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகள், செழுமையான கடல் வளம் போன்றவை ஸ்குபா டைவிங் பிரியர்களிடையே மிகவும் பிரபலமான இடமாக இதனை மாற்றி இருக்கிறது.

மேலும் அகத்தி மற்றும் பங்காரம் தீவுகளில் சிறந்த ஸ்குபா டைவிங் பயிற்சி மையங்கள் அமைந்திருகின்றன. கடலுக்கு அடியில் செல்ல பயப்படுபவர்களுக்கு ஸ்னார்கிளிங் என்னும் கடலுக்கு மேலே மிதக்கும் எளிய சாகசத்தில் ஈடுபடலாம். தேனிலவு செல்ல அருமையான இடங்களில் ஒன்றான இங்கு உங்கள் காதல் துணையுடன் இந்த ஸ்குபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டு கடலுக்கு அடியில் இருக்கும் வேறொரு உலகத்தை ஒன்றாக கண்டு ரசியுங்கள். 

நெத்ரானி தீவு, கர்நாடகா:பெங்களுரு வாசியா நீங்கள்?. கடுமையான வேலைப்பளுவுக்கு மத்தியில் கொஞ்சம் அருகில் எங்கேனும் சென்று வித்தியாசமான சாகச விளையாட்டு ஒன்றில் பங்கு கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? அதிலும் வெளிநாடுகளில் மட்டுமே இருக்கும் என்று நினைத்த ஸ்குபா டைவிங்கை முயற்சி செய்து பார்க்கலாம் என விருப்பமா? வாருங்கள் நெத்ரானி தீவுக்கு ஒரு பயணம் சென்று வரலாம். பெங்களுருவில் இருந்து 500 கி.மீ தொலைவில் இருக்கும் முருதேஸ்வராவில் இருந்து 19 கி.மீ தொலைவில் அரேபியக்கடலில் அமைந்திருக்கிருக்கிறது நெத்ரானி தீவு. 

இந்தியாவில் ஸ்குபா டைவிங் செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த இடத்தின் தனித்தன்மை என்னவெனில் இந்த கடல் பகுதியில் இருக்கும் மீன் வளம் தான். ஸ்குபா டைவிங்கில் முன் அனுபவம் இல்லாதவர்களும் இங்கு எவ்வித பயமும் இன்றி ஸ்குபா டைவிங்கில் ஈடுபடலாம். இங்கே பல வண்ண நிறங்களில் வித விதமான மீன்களை நாம் கண்டு ரசிக்கலாம். 'பைண்டிங் நிமோ' என்னும் பிரபலமான கார்டூன் படத்தில் வருவது போன்ற காட்சிகளை நாம் இங்கே காணலாமாம். எனவே இங்கு சென்று வர நிச்சயம் தவறி விடாதீர்கள். 

இதுவரை காணாத உலகம் கோவா: கோவா, சந்தேகமே இல்லாமல் இந்தியாவின் கொண்டாட்டங்களின் தலைநகரம் என்றால் அது இது தான். அழகான கடற்கரைகள், அசத்தலான இரவு பார்டிகள், கேளிக்கை, கொண்டாட்டம் என கோவா பெயர் பெற்றிருந்தாலும் அங்கே இன்னும் அதிகம் கவனிக்கபடாத ஒரு விஷயம் என்றால் அது கோவாவில் இருக்கும் ஸ்குபா டைவிங் தான். வாருங்கள் அதை பற்றி தெரிந்து கொள்வோம். கோவாவில் பலோலம், பன்ஜிம், வாஸ்கோ ட காமா போன்ற இடங்களில் கடற்கரையை ஒட்டி ஸ்குபா டைவிங் நடத்தப்படுகிறது. 

கோவாவில் நாம் ஸ்குபா டைவிங் செய்கையில் 6-7 மீட்டர் ஆழம் வரையிலும் வெளிச்சம் இருப்பது இதன் தனித்துவங்களில் ஒன்றாகும். இங்கு ஸ்குபா டைவிங் செய்கையில் நாம் கைவிடப்பட்ட கப்பல், குட்டி குட்டி பவளப்பாறைகள், கொஞ்சம் ஆபத்தை விளைவிக்க கூடிய கடல் உயிரினங்கள் போன்றவற்றை காணலாம். அடுத்த முறை நண்பர்களுடன் கோவா செல்கையில் மாறக்காமல் ஸ்குபா டைவிங்கையும் முயற்சி செய்து பாருங்கள். 

ஹவேலோக் தீவு, அந்தமான்: அந்தமான் & நிகோபார் தீவுகளில் இருக்கும் மிக அழகான இடம் என்றால் அது ஹவேலோக் தீவு தான். வெள்ளை மணல் கடற்கரையும், அன்பானவருடன் இயற்க்கை ரசிக்க அமைதியான சூழலையும் கொண்டுள்ள இங்கு ஸ்குபா டைவிங் விளையாட்டும் பிரபலமடைந்து வருகிறது. இந்த தீவு அமைந்திருக்கும் வங்காள விரிகுடா பகுதிதான் உலகத்திலேலே மிக செழுமையான கடல் வளத்தை கொண்டுள்ள பகுதிகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. அந்த அளவு விதவிதமான மீன்களையும், ஆமைகளையும், பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்களை நாம் இங்கே காண முடியும். தேனிலவுக்கு பெயர் போன இந்த தீவில் அமைதியாக இயற்கையை ரசிப்பது மட்டும் இல்லாமல் கடலுக்கு அடியில் பேரமைதியுடன் இயங்கும் மற்றுமொரு உலகத்திற்கும் சென்று வாருங்கள். 

பாண்டிச்சேரி:பாண்டிச்சேரிக்கு 'பல' விஷயங்களுக்கு அடிக்கடி போகும் நம்மில் எத்தனை பேருக்கு அங்கே ஸ்குபா டைவிங் என்னும் அற்புதமான ஒரு விஷயம் இருக்கிறது என்பதே தெரியாமல் இருப்போம். ஆம், நம்ம ஊர் பாண்டிச்சேரியில் சில தனியார் நிறுவனங்களால் ஸ்குபா டைவிங் விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த தனியார் பயிற்சி நிறுவனங்களில் முதல் முறை ஸ்குபா டைவிங் செய்பவர்களுக்கு என்றே பிரத்தேயகமான ஒரு நாள் பயற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top