Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



நோய் வராமல் தடுக்க முன்னோர் தந்த மூலிகை குடிநீர்..

நோய் வராமல் தடுக்க முன்னோர் தந்த மூலிகை குடிநீர்..

இன்றைய சூழலில் மக்கள் அருந்தும் குடிநீர் மாசுபட்டு கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும்.

உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட நம் முன்னோர் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும். அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், போன்றவை அடங்கும்.....

ஆவாரம்பூ குடிநீர்;“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும். இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்; துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது. டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும். 

வல்லாரை குடிநீர்; காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம். இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும். 

சீரகக் குடிநீர்; சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும். சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது. இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும். கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும். சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top