Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -



ரஜினி,கமலை செதுக்கிய இயக்குநர் பாலசந்தர் மரணம்!

ரஜினி,கமலை செதுக்கிய இயக்குநர் பாலசந்தர் மரணம்!

பிரபல இயக்குநர் கே. பாலசந்தர் உடல்நலக்கு குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் வித்தியாசமான படைப்புகளை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரமாக உருவெடுத்தார். தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வரும் ரஜினி, கமல் மற்றும் பல நட்சத்திரங்களை செதுக்கியவர் இவரே. 

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் குறும்பங்கள் என சினிமா துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். 84 வயதாகும் இவருக்கு, சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

பாலசந்தர் வாழ்க்கை குறிப்பு;1930 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் பிறந்தவர் பாலசந்தர். பள்ளிப் பருவத்தில் நாடகங்களை நடத்தி வந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சென்னைக்கு அரசுப் பணிக்காக வந்தார். அப்போது நாடகத்துறையில் கால் பதித்தார். 1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குநரானார். 

அபூர்வ ராகங்கள், எதிர்நீச்சல், அவள் ஒரு தொடர் கதை, வறுமையின் நிறம் சிவப்பு, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி உட்பட 100 படங்களை இயக்கியவர் பாலசந்தர். இவர் இயக்கிய கடைசி படம் பொய். இதில் பொய் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே. பாலசந்தர்தான். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான். 

அத்துடன் எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர். மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. 

மனித உறவுகள் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியவர். இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை, வசனகர்த்தா என பல முகங்களைக் கொண்டவர் பாலசந்தர். 1987 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2010 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதையும் பாலசந்தர் பெற்றார். மனைவி பெயர் ராஜம். மகள் புஷ்பா கந்தசாமி. பாலசந்தருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் கைலாசம் சமீபத்தில் காலமானார்......!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top