Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -அரண்மனை - சினிமா விமர்சனம்!.

அரண்மனை- சினிமா விமர்சனம்

கோலிவுட்டின் இப்போதைய ட்ரெண்டான பேய் நகைச்சுவைப் பட வரிசையில் வந்திருக்கும் படம் அரண்மனை. ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சந்திரமுகி, கொஞ்சம் அருந்ததி என பல சாயல்கள் இந்த அரண்மனையில் தெரிந்தாலும், ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கலகலப்பும் மிரட்டலுமாகக் கலக்கியிருக்கிறார்கள். ஒரு கிராமத்தின் பழைய அரண்மனை. நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கும் அந்த அரண்மனையை விற்க முடிவு செய்கிறார்கள் அதன் வாரிசுகளான வினய், சித்ரா லட்சுமணன், கோவை சரளா அன் கோ. 

அரண்மனைக்கு நானும் ஒரு வாரிசுதான் என கூறிக்கொண்டு சந்தானம் அன் கோவும் அரண்மனைக்குள் நுழைகிறது. அரண்மனையை சுத்தப்படுத்த வரும் வேலையாட்களில் ஒருவனை முதல் நாள் இரவே போட்டுத் தள்ளுகிறது அந்த அரண்மனைக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு பேய். அடுத்தடுத்த இரவுகளில் இன்னும் சில கொலைகள்... இந்த பேய் விவகாரம் அரண்மனைக்குள் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரிந்து, பயத்தில் தவிக்கத் தொடங்க, அப்போதுதான் சுந்தர் சி வருகிறார். 

முதலில் பேயை நம்பாத அவருக்கும் பேய் தன் இருப்பை உணர்த்த, சந்திரமுகி ரஜினி மாதிரியே, பேயின் தடம் தேடிப் போகிறார். சில உண்மைகளைத் தெரிந்து கொள்கிறார். அந்த அரண்மனையில் பேயாக உலவுவது வேறு யாருமல்ல, வினய்யின் மனைவியான தன் தங்கை ஆன்ட்ரியாதான் என்பது அவருக்குத் தெரிகிறது. ஆன்ட்ரியாவின் உடலில் புகுந்துள்ள பேய் ஹன்சிகா. 

5 ஆண்டுகளுக்கு முன் ஹன்சிகா - வினய் காதல், ஊர் கோயில் நகைகளைக் களவாடிய கும்பல், அந்த உண்மை தெரிந்த ஹன்சிகாவைக் கொன்று அரண்மனையில் புதைத்தது என அதிரவைக்கும் உண்மைகள் அவருக்கு தெரிய வருகிறது. இப்போது ஆன்ட்ரியா உடலிலிருந்து ஹன்சிகாவின் ஆவியை விரட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஆன்ட்ரியா, அவர் கணவர் வினய் இருவருக்குமே ஆபத்து. இந்த பெரும் சவாலை சுந்தர் சி எப்படி கையாள்கிறார் என்பதுதான் மீதிக் கதை. 

லாஜிக் என்று பார்த்தால், மகா பெரிய ஓட்டைகள்... ஆனால் பேய் என்பதே லாஜிக்கை மீறிய சமாச்சாரம்தானே. படத்தின் பெரும் பலம், சந்தானம் குழுவினரின் நகைச்சுவை. சந்தானம் மீண்டும் தன் உச்ச இடத்துக்குத் திரும்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் அந்த பேய் மசாஜ் காட்சியில் அவரது நடிப்பு அசத்தல்! படத்தில் நடித்துள்ளவர்களில் பிரமிக்க வைத்தவர் ஹன்சிகாதான். இத்தனைக்கும் இடைவேளைக்குப் பிறகுதான் அவர் வருகிறார். 

ஆனால் அவரது இயல்பான உடல்மொழியும், கொலைகாரர்களிடம் அவர் படும் பாடும், மரணக் குழியில் உயிருடன் அவர் புதைக்கப்படும்போது காட்டும் பாவங்களும்... இந்தப் பெண்ணைப் போய் வெறும் கவர்ச்சிப் பதுமையாக இத்தனை நாள் பயன்படுத்தி இருக்கிறார்களே... ஆன்ட்ரியாவும் சளைக்கவில்லை. பேயாக அவர் போடும் ஆட்டம், சந்தானத்தையும் சாமிநாதனையும் வெளுத்தெடுப்பது, சரவணனைப் பழிவாங்கும்போது காட்டும் ஆக்ரோஷம் என அனைத்திலும் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். 

ஹன்சிகாவும் ஆன்ட்ரியாவும் பேய்களாக ஒருபக்கம் கலக்க, காமெடியில் தானும் ஒரு அசுரப் பேய் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கோவை சரளா. அவருக்கு சரியான துணை மனோபாலா. ஒரே சிரிப்பு மயம்! வினய், வில்லன் சரவணன், தூக்கத்தில் நடக்கும் சித்ரா லட்சுமணன், அந்த சிறுமி, தண்டபாணி, சாமியார் கோட்டா சீனிவாசராவ் என அனைவருமே நிறைவாக நடித்திருக்கிறார்கள். பரத்வாஜின் இசையில் பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. 

சொல்லப் போனால் படத்தின் வேகத்துக்கு தடையாகவே அவை உள்ளன. கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையில் அருந்ததியின் சாயல். இருந்தாலும் ரசிகர்களை மிரட்ட உதவியிருக்கிறது. யுகே செந்தில் குமாரின் ஒளிப்பதிவு இயக்குநருக்கு பெரும் பலம். குறிப்பாக ஹன்சிகாவைக் காட்டியிருக்கும் விதம்... ஆற்றில் நடக்கும் அந்த இறுதிக் காட்சி! 

சுந்தர் சியின் இந்தப் படத்தில் உள்ள முக்கிய குறை, வேறு படங்களை நினைவுபடுத்தும் கதைதான். ஆனால் அரண்மனை, அழகிய பேய், பூசாரி, அம்மன் என்பது பேய்க் கதை ஃபார்முலாவாகிவிட்டது. பல முறை பார்த்த அதே ஃபார்முலாவைக் கொண்டே ரசிக்கும்படி ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் அவரைப் பாராட்டித்தானே ஆக வேண்டும்....!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top