Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -தமிழக அரசியலில் இப்படி நடந்தா எப்படியிருக்கும்.? (சிரிக்க மட்டும்)

தமிழக அரசியலில் இப்படி நடந்தா எப்படியிருக்கும்.? (சிரிக்க மட்டும்)

ஏங்க எத்தனை நாட்களுக்கு தான் கருணாநிதியை, ஜெயலலிதா விமர்சித்து பேசுவதையும்;ஜெயலலிதாவை கருணாநிதி விமர்சித்து பேசுவதையும் கேட்பது,படிப்பது? கொஞ்சம் மாறுதலுக்காக,ஜெயலலிதாவுக்கு கருணாநிதியும், கருணாநிதிக்கு ஜெயலலிதாவும் ஓட்டுக் கேட்டால் எப்படி இருக்கும் என்ற விபரீத கற்பனையால் விளைந்தது இது.....

கருணாநிதி: உடன்பிறப்பே...இனிமேல் உன்னை, 'ரத்தத்தின் ரத்தமே' என, அழைக்கப் போகிறேன். அதிர்ச்சி அடையாதே. பெரியாரின் பாசறையில் நான் பயின்ற காலத்தில், அண்ணா எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது. எதிரி என்று எவருமே இல்லை. நண்பன் என, யாரும் இல்லை. கல்லக்குடி போராட்டத்தில், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தபோது, வராத ரயிலை ஓட்டாத டிரைவரையே நண்பனாக ஏற்றுக்கொண்டவன் நான். 

அப்படிப்பட்ட நான் செல்வி ஜெயலலிதா அம்மையாரை அன்பு சகோதரியாக ஏற்றுக் கொள்ள மாட்டேனா? இனிமேல் எனக்கு அவர் தான், 'உடன் பிறவா சகோதரி'. 'ஏன் இந்த மாற்றம்? என்ன நடந்தது இவருக்கு' என, நீ குழம்பி இருப்பாய். குழம்ப வேண்டாம். என்னைப் பற்றி தான் உனக்கு தெரியுமே? எந்தக் கொள்கையையும் நான் நிரந்தரமாக நீட்டிப்பதில்லை. சட்டையைப் போல, 'சகட்டுமேனிக்கு' மாற்றிக் கொள்வேன். 

இந்தி எதிர்ப்புக் கொள்கை எப்போதோ பிந்தி விட்டது. மாநில சுயாட்சி கோஷம், பல ஆண்டுகளுக்கு முன்பே மறந்து போயிற்று. கால ஓட்டத்தில், இப்படி எத்தனையோ கொள்கை மாற்றங்கள் வந்து இருக்கும்போது, சகோதரி ஜெயலலிதாவை ஆதரித்து நான் பிரசாரம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனவே வருகிற பொதுத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில், அழுத்தமாக வாக்களித்து, அ.தி.மு.க.,வை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். 

ஜெயலலிதா: எம்ஜிஆரின், 'உடன் பிறப்புகளே'! நமக்கு 'ரத்தத்தின் ரத்தங்கள்' இனிமேல் தேவையில்லை. உடன்பிறப்புகள் மட்டுமே, உடன் இருக்க வேண்டும். உங்கள் முன் நான் நிற்பது எதற்கு தெரியுமா? உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர், தன்மான சிங்கம், ஆர்ப்பரிக்கும் அடலேறு, தமிழ்க் குடிதாங்கி, இனமான போராளி, நெஞ்சுக்கு நீதி தந்த கோமான் தொல்காப்பிய பூங்காவை தோற்றுவித்த வாழும் இலக்கணம் டாக்டர் கலைஞர், 

அன்பு அண்ணன் கருணாநிதிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். என்னை, 'உடன் பிறவா சகோதரி'யாக ஏற்றுக்கொண்ட, அண்ணன் கலைஞருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திடீரென கொள்கையை ஏன் மாற்றிக்கொண்டேன் என பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. நான் ஏன் மாறக் கூடாது? மாறுவது எனக்கு புதிதா என்ன? கடைசி வரை கூடவே வைத்திருப்பார் என நம்பிக் கொண்டு இருந்த 'காம்ரேட்'களை கழற்றி விட்டு, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையா? 

சென்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து, வாக்குகளையும் பெற்று, ஆட்சியையும் பிடித்த பிறகு கறிவேப்பிலையை 'கடாசுவது' போல், தே.மு.தி.,க.,வை தொலைக்கவில்லையா? இலங்கைப் பிரச்னையில், 'தடால்' என தடம் புரளவில்லையா? கார்டனைவிட்டு கழற்றிவிட்ட, 'உடன் பிறவா சகோதரி'யை மீண்டும் மீண்டும் சேர்த்து சொந்தம் கொண்டாடவில்லையா? 

கட்சியை நிறுவி ஆட்சியையும் பிடித்து மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்த எம்.ஜி.ஆர்., பெயரையே இருட்டடிப்பு செய்யவில்லையா? இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எனவே வருகிற பொதுத்தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை, 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து, தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். செய்வீர்களா...? 

(உடனே கூட்டத்தினரும் செய்வோம் செய்வோம்' என பதில் முழக்கமிட்டதும் ஹெலிகாப்டரில் ஏறி கோபாலபுரம் நோக்கி ஜெயலலிதா புறப்பட்டார்)


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top