Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -பழங்களின் மகத்தான மருத்துவ குணம்!.(அரிய ஆரோக்கிய தகவல்)

பழங்களின் மகத்தான மருத்துவ குணம்..(அரிய ஆரோக்கிய தகவல்)

உற்சாகத்திற்கு வாழை: தினமும் வாழைப்பழம் உண்போர் நெடுநாட்கள் இளமைத் தெருவிலேயே வசிக்கிறார்கள். உற்சாகம் இழக்கும்போதும், காய்ச்சல் நேரத்திலும் இதைச் சாப்பிடலாம். நம் மூளையில் செரடோனின் என்ற பொருளை வாழைப் பழமே தயாரிக்கிறது. இது நன்கு சுரக்கும்போது, நரம்பு மண்டலம் விழித்தெழுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனநலம் குன்றியோருக்கு வாழைப்பழம் ஓர் அட்சய பாத்திரம். 

குரல் வளத்திற்கு அன்னாசி: அன்னாசிப் பழத்தில் புரோமெலின் என்னும் செரிமானப் பொருள் உண்டு. இது இறைச்சியையும் விரைந்து செரிக்க உதவுகிறது. நல்ல குரல் வளம் தருகிறது. தொண்டைப் புண் ஆற்றுகிறது. சதை வளராமல் தடுக்கிறது. இதிலுள்ள குளோரின் சிறுநீரக இயக்கத்தை தூண்டிக் கொண்டேயிருக்கிறது. தோலுக்கு அடியிலுள்ள அழுக்குகளையும் இது உறிஞ்சி வெளியேற்றுகிறது. 

ஜீரண சக்தி தரும் பப்பாளி: தானே வளர்ந்து நிற்கும் பப்பாளி காயாகவும், பழமாகவும் பயன்படுகிறது. பச்சையாக உண்ணக்கூடிய 38 வகைப் பழங்களில் பப்பாளியும் உண்டு. இதில் உள்ள பாப்பைன் என்ற திரவம் ஜீரண சக்தியை தூண்டும். இதன் விதையிலுள்ள கார்சின் சிறந்த பூச்சிக் கொல்லியாகும். மதுவால் கெட்ட கல்லீரலையும், கொசுவால் வந்த யானைக்காலையும், நீரிழிவின் பேரழிவையும் பப்பாளிப் பழம் தடுத்துக் காக்கிறது.

ரத்த உற்பத்திக்கு திராட்சை: 

திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுகிறது. இதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும், மலச்சிக்கல், ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய் பணிபுரிகிறது. 

பிள்ளைவரம் தரும் நாவல்: இது நம்ம ஊர்ப் பழமாகும். இது நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து. கணையத்துடன் இது நேரடித் தொடர்பு கொண்டு நீரிழிவுக்கு நியாயம் கேட்கிறது. சிறுநீர்க் கற்கள் கரையவும், தொழுநோய் குணமாகவும் நாவல் பழச்சாறு உதவுகிறது. அபூர்வமான வைட்டமின் ஈ இதில் உண்டு. பிள்ளைவரம் வேண்டும் பெண்கள் சாமியார்களைச் சுற்றாமல் நாவல் பழத்தைத் தின்னலாம். மலட்டுத் தன்மையைப் போக்கி, கர்ப்ப விருத்தியை நிச்சயம் பெறலாம். 

சிறந்த மருந்தகம் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை சிட்ரிக் அமிலமும், வைட்டமின் சி யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது. 

ஆரோக்கியத்திற்கு அத்தி: இதைப் பற்றி ஹோமரின் காவியம் பேசுகிறது. புரதம், கொழுப்பு, மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கால்சியம் இதில் உள்ளது. பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது. மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து. முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான்.

ஆரஞ்சும் இன்னொரு தாய்ப்பாலே: தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும். 

வயிற்றைப் பேணும் மாதுளை: மாதுளை மஞ்சள் காமாலையைப் போக்கி, கல்லீரல், இதயம், சிறுநீரகம் இவைகளையும் பாதுகாக்கிறது. பித்த வாந்தி உள்ளோர் இதைத் தேனுடன் சாப்பிட உடனடி நிவாரணம் உண்டு. மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்கும் பழமாகவும் இது முதலிடம் பெறுகிறது. 

பார்வை இழப்பை தடுக்க மாம்பழம்: இது முக்கனிகளில் ஒன்று. இதிலுள்ள டார்டாரிக் அமிலமும், மாலிக் அமிலமும் நரம்புத் தளர்ச்சியின்றி உடலைக் காக்கின்றன. இது சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாகும். பசியைத் தூண்டக் கூடியது. தோலுடன் சாப்பிட வேண்டும். அதிக பலன் கிடைக்கும். பார்வை இழப்பைத் தடுக்கிறது. புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது ஆண்மையைப் பெருக்கி, கூ(ட)டல் செய்கிறது. 

இது கிடைக்கும் போது சாப்பிட்டு வைத்தால் குளிர்காலத்தில் வரும் சளி, ஜல தோஷம் இவைகளை முன்கூட்டியே கட்டுப்படுத்தலாம். இப்படி நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற வகைகளில் பழங்களுண்டு. அவை ஒவ்வொன்றிலும் ஒரு குணம் உண்டு. அவற்றைக் கண்டறிந்து ருசிக்க வேண்டியது நமது பொறுப்பு....1


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


உங்கள் கருத்து என்ன?


 
Back to Top